காமன்வெல்த் பேங்க் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியை ஆஸ்திரேலியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் 12 புள்ளிகளுடன் அது முதலிடத்தை பெற்றது.
பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த இத்தொடரின் 6வது போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இதன்படி அந்த அணி 49.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தனது சொந்த மண்ணில் கடைசி போட்டியில் பங்கேற்ற துவக்க வீரர் கில்கிரிஸ்ட், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆட்டத்தின் 38வது ஓவரில், தனது 16வது சதத்தை கில்கிறிஸ்ட் பூர்த்தி செய்து, 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
ஹைடன் 4 ரன், கேப்டன் பாண்டிங் 25 ரன், கிளார்க் 43 ரன், சைமண்ட்ச் 4 ரன், ஹசே 25 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். பின் வரிசையில் வந்த ஹோப்ஸ் (2), ஹாக் (5), பிரட் லீ (2), ஜான்சன் (0) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இதன் பின் 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்ந்த இலங்கை, 45.3 ஓவர்களில் 173 ரன்களுக்கு சுருண்டது. சிறப்பாக விளையாடி 80 ரன்கள் குவித்த சங்ககராவைத் தவிர மற்றவர்கள் சோபிக்கத் தவறினர்.
ஆஸ்திரேலிய தரப்பில் பிராக்கென், ஜான்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாக் 2 விக்கெட்டுகளையும், பிரட் லீ, ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சொந்த மண்ணில் சாதனை சதம் அடித்த கில்கிறிஸ்ட், ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2ம் இடத்திலும் (8 புள்ளிகள்) , இலங்கை (6) 3ம் இடத்திலும் உள்ளன.
இத்தொடரின் அடுத்த போட்டி, இந்திய- ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே வரும் 17ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
1 comment:
பொதுவாக அடம் கில்கிறிஸ்ட் (கில்லி) எப்பொழுதுமே இலங்கைக்கு எதிராக நன்றாக ஆடக்கூடியவர். பலமுறை நிரூபித்தவர். அதற்கு சிகரம்தான் 2007ம் ஆண்டு உலக கிண்ண இறுதிபோட்டி. நேற்று சதம் பெறவேண்டும் என்றே ஆடிய மாதிரி இருந்தது. வழமையான அதிரடியை பார்க்க முடியவில்லை. சொந்த மைதானத்தில் சதம் அடித்த உடன் சற்றே உணர்ச்சி வசப்பட்டார் போல தோன்றியது. இருந்தாலும் அவரது அதிரடி ஆட்டத்தை நாமெல்லாம் இழக்கப்போகின்றோம். சென்று வாருங்கள் கில்லி. (Not Pilli).
Post a Comment