மாலை வேளையில் களுத்துறை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தை அடைந்த வெற்றிக் குழுவினர் ஆலய பூஜையில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாலை 7.00 மணி அளவில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. வெற்றியின் விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜெய்சன் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்க தொடர்ந்து வெற்றியின் அறிவிப்பாளர் சதீஷும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களாக கௌரவ ரெஜினோல்ட் குரே அவர்களும் களுத்துறை பிரதேச சிரேஷ்ட போலீஸ் உத்தியோகத்தரும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
கடவுள் வாழ்த்துடன் ஆரம்பமான நிகழ்வில் தொடர்ந்து மங்கலம் தரும் மங்கல விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.
அதன் பின் ஆசியுரை வரவேற்புரை இடம்பெற்றதுடன் விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. அதன் பின் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின.
கராட்டத்துடன் ஆரம்பமான நிகழ்வில் அதுவரை மேடை நிகழ்ச்சிக்குரிய தொனியிலே இடம்பெற்ற அறிவிப்பையும் மாற்றி கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர் சதீஷ், ஜெய்சன் மற்றும் தினேஷ்.
தொடர்ந்து பல சுவாரஸ்யமான திறமைகளை வெளிக்காட்டிய பேச்சு நடன இன்னும் பல நிகழ்வுகள் நடந்தேறின. இடை இடையே ஆலயத்தில் சிவராத்திரியின் ஜாமப்பூசைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
நிகழ்ச்சிகளின் ஒரு மகுடமாக வெற்றியின் அறிவிப்பாளர் A.R.V.லோஷன் அவர்களுடைய சகோதரனும் கொழும்பு பல்கலைக்கழக மாணவனும் ஆனா தவமயூரன் அவர்களும் மற்றுமொரு கொழும்பு பல்கலைக்கழக மாணவனான நிரோஷனும் நடுவர்களாக கலந்து சிறப்பித்த பட்டி மண்டபம் நிகழ்வு மிகவும் சூடாகவும் சுவையாகவும் நடைபெற்றது.
இவ்வாறு பல நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது வெற்றிக் குழுவினர் நேயர்களுடன் நேயர்களாக கலந்து இருந்து திடீரென அவர்களுக்குள் இருந்து ஒலி வாங்கியுடன் எழுந்து அவர்களுடன் பேசியது முதன்முறையாக ஒரு வித்தியாசமான இன்ப அதிர்ச்சியை நேயர்களுக்கு வழங்கியது அது மட்டுமன்றி வெற்றியின் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்பாளர்கள் பற்றியும் நேயர்கள் எங்களுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சில அன்பான நேயர்கள் எங்களுக்கு ஐஸ் கிரீம் மற்றும் தேநீர் இன்னும் உணவு வகைகளை வாங்கித் தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினர்.
தொடர்ந்து அதிகாலை 3.30 அளவில் ஒரு நேயர் வெற்றி வானொலிக்கு தொலைபேசி அழைப்பெடுத்து பாடல் கேட்பதற்காக அழைப்பை ஏற்ப்படுத்த கலையகத்தில் இருந்து வெற்றியின் தினேஷ் அந்த நேயருடன் பேச ஆரம்பித்தால் ஒரு சின்ன குழந்தை. கேட்டதோ வில்லு பாட்டு. தினேஷோ வில்லுப்பாட்டு வேணுமென்றால் வில்லுடன் வரவேண்டும் என சொல்ல அதுவரை மறைந்ததிருந்து குழந்தை குரலில் பேசிய சதீஷ் வில்லுடன் மேடை ஏறினார். தொடர்ந்தது சிறிது நேரம் இந்த கலாட்டா தொடர்ந்த பின் வில்லுப்பாட்டு நிகழ்வு சிறுவர்களால் மேடை ஏற்றப்பட்டது. அந்த நிறைவு நிகழ்வுடன் வெற்றி குழு விடைபெற்றது.
இந்த நேரத்தில் ஆலய பரிபாலன சபையினருக்கும் அப்பிரதேச மக்களுக்கும் வெற்றிக் குடும்பம் சார்பாக நன்றி தேரிவித்துக்கொல்கின்றோம்.
No comments:
Post a Comment