Pages

Thursday, February 19, 2009

வெற்றியின் ஓராண்டு பூர்த்தி



வெற்றியின் முதலாவது வெற்றிக்கொண்டாட்டங்கள் நேற்று ஆர்ப்பாட்டமில்லாமல் ஆடம்பரமில்லாமல் அமைதியான முறையில் நேயர்களின் வாழ்த்து மழையுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.

காலை வேளையில் அதிரடி புதிரடி நிகழ்ச்சியில் நேயர்களின் வாழ்த்துக்களை எஸ்.எம்.எஸ் வாயிலாக மட்டுமன்றி தொலைபேசி நேயர்களையும் நேரடியாக இணைத்துக்கொண்டு ஆரம்பித்து வைத்தார் ஹிஷாம்.
இதில் அறிவிப்புத்துறையில் முன்னோடியான புது தலைமுறையினரை என்றுமே வாழ்த்தும் B.H.அப்துல் ஹமீத் அவர்கள் எங்கள் வெற்றியை வாழ்த்தியது சிறப்பு.
அதனைத்தொடர்ந்து நாங்களும் ஸ்பெஷல் செய்யப்போகிறோம் என்று முன்னோட்டம் வேறு கொடுத்துக்கொண்டு பூஜாவும் வைதேகியும் வந்து அனைத்து அறிவிப்பாளர்களையும் செய்திப்பிரிவு மற்றும் விரிவாக்கர்பிரிவைச் சேர்ந்தவர்களையும் நேயர்களுக்கு வாழ்த்து சொல்ல வைத்து அசத்திட்டாங்க.
இதில் எங்கள் முகாமையாளர் லோஷன் அறிமுகமாகும் போது "தலைபோல வருமா...." பாடலை ஒலிபரப்பி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார்கள்.(நீங்கள் தலையாக இருந்தா அந்தக் கூட்டணிக்கு எப்போதும் வெற்றி தான்.)
அதன் பின் உதவி முகாமையாளர் ஹிஷாம் அறிமுகப்பாடலாக அவர் அதிகம் உச்சரிக்கும் பெயர் கொண்ட "மல்லிகா ........" பாடலை ஒலிபரப்பினர்.(ஹிஷாமிடம் கண்டிப்பாக இதைபற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்)
அதன் பின் விமல் தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ளும் போது "கண்ணில் வந்ததும் நீதான்......." பாடலை ஒலிக்கவிட்டு அறிமுகப்படுத்தினர்.(ஒரு காலத்தில் (!?) விமலுக்கு சோகப்பாட்டுக்கள் என்றால் உயிர்)
அதற்கடுத்து வந்தார் நம் இசைக்கட்டுப்பட்டாளர் பிரதீப் இவரின் அறிமுகப்பாடலோ "விழிமூடி யாசித்தால்....." பாடல் (யூத் என்று சொல்லிக்கொண்டு இந்த பாட்டைக் கேட்பாராம்!......)
அடுத்ததாக வந்தார் நம்ம பில்லா சந்துரு (இவருக்கும் அந்த பில்லாவிற்கும் என்ன சம்பந்தமோ?.........)
அதன் பின் எங்கள் செய்திப் பிரிவைச்சேர்ந்த காளை ஜோ பென்சி வரும்போது "வந்திட்டான்யா வந்திட்டான்யா காளை........." பாடல் ஒலித்தது.(உங்கள் சிகை அலங்காரத்தை எங்கே செய்கிறீர்கள்? அடுத்த சிகை அலங்காரம் என்ன?)
உதவி இசைக்கட்டுப்பாளர், எப்போதும் சந்தேகம் கேட்கும் டிஷோக்குமார் தன் கறுவாத்தோட்டம் பற்றி சொல்லி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
காதல் கொண்டேன் தனுஷ் நாமத்தில் இருந்து இப்போது வெற்றியின் ஜூனியர் என சொல்லும் ஜெய்சனுக்காக "ஜூனியர் .." பாடலை ஒலிக்க விட்டனர்.
அடுத்ததாக சதீஷ் அறிமுகமாகும் போது "ராமா ராமா......." பாடலை ஒலிக்க விட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.(ஏனுங்கன்னா நீங்க விஜய் போலவோ?)
அதன் பின் "அழகுக் குட்டி....." பாடலுடன் ரஜீவ் அறிமுகமாகி தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(அண்ணா அக்கா என எல்லோரையும் பாசமாக அழைக்கும் இவர் எங்கள் எல்லோருக்கும் பெரிய அண்ணா.....)
அடுத்து வந்தவர் "மலையாளக்குருவி......" வனிதா தன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.(மலையாளப் பக்கம் இருந்து எப்ப தமிழ் பக்கம் வரப்போறிங்க?.)
பூஜாவும் வைதேகியும் எங்கள் எல்லாருக்கும் பாட்டும் போட்டிங்க உங்களுக்கு ஏன் குட்டிப்பிசாசே பாடல் போடல? (பரவாயில்லை நீங்களும் நல்லாத்தான் ஸ்பெஷல் செய்கிறீர்கள்..................)
இதில் எங்களிடமிருந்து தன் மாற்று வேலை காரணமாக சற்று தொலைவில் இருக்கும் செந்தூரனும் இணைந்து கொண்டது மகிழ்ச்சியான விடயம்.(தொலை தூரம் போனாலும் வெற்றி மீது நீங்கள் கொண்ட பாசம் மாறாததற்கு நன்றி)
இவர்கள் காதலர் தினத்தையும் விட்டு வைக்கவில்லை. வெடி முத்துவை கூட்டி வந்து காதலர் தின விசேட "பன்ச்" சொல்ல வைத்தனர். அதுமட்டுமன்றி காதலியை சந்திக்க தாமதமாகப் செல்பவர்கள் தப்பிக்க சில வழிமுறைகளையும் வழங்கினர்.

அடுத்து இருபது புது இசை நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக நேயர்களின் வாழ்த்துக்களோடு சந்துருவும் வனிதாவும் அசத்திட்டீங்க.(நேற்று பெரிய அகப்பை வாங்கி வந்ததைப் பார்த்தா கலக்குவீங்க என்று பார்த்தா அசத்திட்டீங்க)

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் காதலர்தின சிறப்பு நிகழ்ச்சியாக ஏன்? எதற்கு? எப்படி? என அடிக்கடி கேட்கும் பிரதீப் தந்த நிகழ்ச்சி அருமை. (எப்பதான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல போறிங்க?)

அதன் பின் லோஷன் மற்றும் விமல் இணைந்து வழங்கிய அவதாரம் வெற்றியின் இரண்டாவது வருடத்தில் எடுத்திருக்கும் புது அவதாரம்.(நீங்க இந்த விளையாட்டு தனத்தை இந்த பிறந்த நாளிலும் விடமாட்டிங்களா? விளையாடுங்க விளையாடுங்க?)

அதற்கு பிறகு தான் காத்திருந்தது கலக்கல் திருவிழா. இரவு செய்தி அறிக்கையைத தொடர்ந்து வழமை போலத்தான் தொடங்கினார் சதீஷ், நானாட நீயாட என்று. விசேட நிகழ்ச்சி வரப்போகிறது என்று கூறிக்கூறியே எங்கள் நாடித்துடிப்பை அதிகரித்தவண்ணம் இருந்தார்.
அதன் பின் 9.30 அந்த கூட்டணி, சந்துருவும் விமலும் தங்கள் நக்கல் நையாண்டிகளுடன் அதிரடியாகத் தொடங்கினர். அதற்கு பின்னர் லோஷன், ஹிஷாம், பிரதீப், ரஜீவ், என எல்லா அறிவிப்பாளர்களும் ஒன்றாக கலையகத்தில் கூட விரிவாக்கல் பிரிவைச் சேர்ந்த ஜேசன், தினேஷும், செய்திப் பிரிவைச் சேர்ந்த ஜோ பென்சியும் ரஞ்சன் அருண் பிரசாத்தும் கலையகத்தில் ஒன்றாகினர்.

அடுத்து வெற்றியின் வெற்றிப்படிகளில் கடந்து வந்த சாதனைகளையும் வேதனைகளையும் எந்த ஒழிவு மறைவும் இன்றி நேயர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.
பெண் அறிவிப்பாளர்கள் பூஜா மற்றும் வைதேகியும் தொலைபேசி வாயிலாக இணைந்து தங்கள் கலாட்டாக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அண்மையில் வெற்றியில் இருந்து விடைபெற்று சென்ற சுபாஷும் தொலைபேசி வாயிலாக இணைந்து தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.(நீங்கள் வெளிநாடு செல்லும் பொது காற்றின் சிறகுகளில் மிதந்தா போகிறீர்கள் அல்லது நானாட நீயாட என ஆடிக்கொண்ட போகிறீர்கள்? அங்கேயும் தாம்தூமாக வாழ வெற்றியின் வாழ்த்துக்கள்.)
இதில் ஒவ்வொருவரும் தங்கள் சகாக்களை கிண்டல்கள் செய்ததுடன் எதையும் மறைக்காமல் உண்மைகளைப் பகிர்ந்து கொண்டனர். நிறைவாக எல்லா கலாட்டங்களும் நள்ளிரவில் களைகட்டி நிறைவு பெற்றது.
காதலர்களையும் மகிழ்விக்க நினைத்த வெற்றி இடையிடையே எங்கள் நேயர்களின் காதல் கதைகளை அவர்கள் குரலிலேயே ஒழிக்க விட்டு மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. நிகழ்ச்சிகளின் இடை இடையே காதலர் தின சிறப்பு பகுதிகளையும் வழங்கி வாழ்த்தியது.

வெற்றிக் குடும்பமும் நேயர்களும் இந்த பிறந்த நாளால் மகிழுந்து நிற்பதோடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டிலும் புதுவிதி செய்து வாழ்க்கைக்கு வெற்றி தருவோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,
வாழ்க்கைக்கு வெற்றி,
இனி ஒரு புது விதி செய்வோம்.

Friday, February 13, 2009

வெற்றிப் பயணத்தில் ஒரு வருடம்.........

கடந்த ஆண்டு February மாதம் 14ம் திகதி பிறந்த உங்கள் வெற்றி FM வானொலி அதன் பின் தவழ்ந்துஎழுந்து நடந்து, வீறு நடையுடன் நாளை முதலாவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் வந்த சில சோதனைகளையும் சாதனைகளாக்கி இன்று இதயம் வென்று வெகு விரைவில் இமயம் வெல்ல வெற்றி நடை போடுகிறது.

A.R.V.லோஷனின் நேர்த்தியான வழிகாட்டலில் வலம்வரும் வெற்றி, நேயர்களின் ரசனைத்தன்மையை நாடிபிடித்தறிந்து அவர்களுக்கு என்ன பிடிக்குமோ,அவற்றை நிகழ்ச்சிகளாகத் தந்துகொண்டிருக்கிறது. வானலைவழியே தேன்மழை பொழிந்து வரும் உங்கள் வெற்றி, தன் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எந்த நிகழ்ச்சியும் நேயர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தால் மாற்றவில்லை என்பது பெருமை கொள்ளும் விடயமே.

நாளை அதிகாலை பூபூக்கும் நேரத்தோடு ஆரம்பிக்கும் சிறப்பு நிகச்சிகள் நாள் முழுவதும் தொடர இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகள் சற்று வித்தியாசமாகவும் உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தவும் இருக்கிறது. அந்த நிகழ்ச்சிகளை பற்றிய முன்னோட்டங்கள் இப்போது வானலை வழியே ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதன் சுவையையும் சுவாரஸ்யத்தையும் நாளை எங்கள் நேயநெஞ்சங்கள் உணரலாம்.

ஆர்ப்பாட்டமில்லாமல் மிக அமைதியான முறையில் எங்கள் நேயர்களுடன் இந்த நன் நாளில் கால் பதித்து கொண்டாட இருக்கிறோம். வெற்றியின் நேயர்கள் அனைவரும் வெற்றியின் பங்காளர்கள் எனவே அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்களுடன் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த ஒரு வருடமும் எங்களோடு இணைந்து வெற்றிக்கொடி கட்டும் நேயர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு கிட்டும் என்ற நம்பிக்கையோடு இரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றோம்............................

வெற்றி எப்.எம்

வாழ்க்கைக்கு வெற்றி.

இனி ஒரு புது விதி செய்வோம்.

Thursday, February 12, 2009

ஆச்சரியமும் அமானுஷ்யமும்

ஆச்சரியமும் அமானுஷ்யமும்

பலரும் அஞ்சும் ஆனால் அறிய ஆர்வமாக இருக்கும் ஒரு சுவாரஸ்யமான மனித சக்திக்கு அப்பால்ப்பட்ட விடயத்தை வெற்றி வெற்றிகரமாக தர ஆரம்பித்திருக்கிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இரவு 10 மணிமுதல் 12 மணிவரை பேய்கள் பற்றிய உண்மைக் கதைகள் மிகச்சிறந்த பின்னணி இசைகளுடன் உங்களை திகிலூட்டிக்கொண்டிருக்கிறது.

பலரது வாழ்க்கையில் நிஜமாகவே நடைபெற்ற சிலர் கதையாகவே கேட்டு சிலிர்த்துபோன சம்பவங்கள் வானலையில் சங்கமமாகின்றது. சிறுவர்களும் இதயம் பலவீனமானவர்களும் தனிமையில் இருப்பவர்களும் இந்த நிகழ்ச்சிசை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

இந்த நிகழ்ச்சியில் உங்கள் பிரதிகளும் இடம்பெற விரும்பினால் ஆச்சரியமும் அமானுஷ்யமும், வெற்றி FM, த.பெ. இல.1011, கொழும்பு என்ற முகவரிக்கு எழுதி அனுப்பி வைக்கலாம் அல்லது உங்கள் குரலிலேயே இறுவட்டில் பதிவு செய்து அனுபிவைக்கலாம். அதுமட்டுமன்றி vettri@voa.lk என்ற மின்அஞ்சல் வழியாகவும் அனுப்பி வைக்கலாம்.

வெற்றி,

வாழ்க்கைக்கு வெற்றி.

....................................................................................................................................

தினக்குரலில் வெளியான விமர்சனம்.

வெற்றியின் பயனுள்ள நிகழ்ச்சிகளோடு ஆச்சரியமும் அமானுஷ்யமும்.

வெற்றி fmமில், கடந்த வெள்ளிக்கிழமை 30ம் திகதி இரவு செய்திகளைத் தொடர்ந்து புதிய நிகழ்ச்சியான "ஆச்சரியமும் அமானுஷ்யமும்" என்றொரு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வானொலியில் கூட "திக் திக்" நிகழ்ச்சிகளை படைத்து சாதிக்கமுடியும் என்பதற்கு இந்நிகழ்ச்சி நல்லதொரு வழிகாட்டி. இந்நிகழ்ச்சி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்காகவோ அல்லது தேவையற்ற பயஉணர்வை உண்டாக்குவதர்க்காகவோ என எண்ணத் தோன்றவில்லை. உண்மையில் இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ பேர் வாழ்வில் நடந்திருக்கிறது.

பேய் இருக்கா......? ஆவி(இறந்த ஆத்மா) நடமாட்டம் இருக்க போன்றவை கேள்விக்குறியாக இருந்தாலும் இவ்வாறான செயற்பாடுகள் நிகழ்வது உண்மை. நமது முன்னோர்கள் இது பற்றிக் கூறுகையில், நாம் அதை கிண்டலாக எடுத்துக்கொள்வோம். அதற்கு அவர்கள் பரிகாரம் செய்கையில் மூடநம்பிக்கை என்போம். ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் இப்போதும் இருப்பது உண்மை. இன்று படித்தவர்கள் கூட இதை நம்பும் அளவிற்கு சில நிகழ்வுகள் நடக்கிறது. ஆனால் அதை மற்றவர்களிடம் கூறினால் எங்கே அவர்கள் கிண்டல் செய்வார்களோ என எண்ணி மனதுக்குள்ளேயே வைத்திருப்பார்கள். மனதுக்குள் பூட்டி வைத்து மன நோயாளி ஆவதை விட இந்நிகழ்ச்சி மூலம் வெளிக்கொண்டு வரலாம். (முடிந்தால் தங்களுடைய வாழ்வில் இவ்வாறான சம்பவங்களை சந்தித்தவர்கள் தங்களுடைய குரலிலேயே விரித்து ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.) இந்நிகழ்ச்சிக்கு குரல் கொடுத்த அறிவிப்பாளர்கள் மிகத்திறமையான விதத்தில் சுவாரஸ்யமான முறையில் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சி அமானுஷ்யம் பற்றியதாக இருந்தாலும் வானலையில் கூட இவ்வாறான திகில் மிக்க நிகழ்ச்சியை படைக்க முடியுமா என்பது ஆச்சரியத்தை வழங்கியது. உண்மையான சில விடயங்களை இவ்வாறான முறையில் வெளிப்படுத்தும்போது ஏனையோர் பயம்கொள்ளா வண்ணம் இருக்க இடைஇடையே பாடல்களை ஒளிபரப்புவது நல்லது.

இலத்திரனியல் ஊடகம் என்பது வெறும் பொழுது போக்குதான் என பலர் நினைத்துக்கொண்டு செயல்படுகின்றனர். ஆனால், அந்த பொழுது போக்கும் நேரத்தில் கூட பயனுள்ள பல தகவல் கருத்துக்கள்,நகைச்சுவை நிகழ்ச்சியினை புகுத்தி இருக்கிறது வெற்றி பம்.

அதற்க்கு காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகும் வெற்றியின் விடியல் ஒரு சான்று. அன்றாட முக்கிய தகவல்களுடன் தனித்துவமான முறையில் ஒலிக்கிறது. அதில் சிறப்புற பங்குபெறும் பேப்பர் தம்பி அன்றாடம் வெளியாகும் செய்தித்தாளில் செய்திகளைத் தொகுத்தளிக்கும் விதமும் அருமை. அதேபோல் மாலை மணி தொடக்கம் 9 மணி வரை ஒளிபரப்பாகும் "எங்கேயும் எப்போதும்" நிகச்சியும் நேயர்களை தன்வசம் ஈர்த்துள்ளது எனலாம். குறிப்பாக நகைச்சுவை கலந்த கேள்வி பதில் கலந்து வரும் நிகச்சி வரவேற்கத்தக்கது. அறிவிப்பாளர் தொகுத்து வழங்கும் விதம்தான் வெற்றி எப்.எம் குழுவினரின் அளவான பேச்சு தெளிவான உச்சரிப்பு அனைத்திற்கும் மேல் நேயர்களுடன் கொண்டிருக்கும் உறவு பாலம் இனிவரும் காலங்களிலும் வெற்றியை உறுதிப்படுத்தும்.

வானலையாள்.

Thursday, February 5, 2009

தேர்தல் களம்

என்றும் எதிலும் புதுமை செய்யும் உங்கள் வெற்றி வானொலியின் ஒரு புதுப்படைப்பு தான் தேர்தல் களம். இலங்கையின் வடமேல் மற்றும் மத்திய மாகணசபைத் தேர்தலை முன்னிட்டு தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களை நேரடியாக பேட்டி கண்டு அவர்களின் வாக்குறுதிகளையும் தேர்தல் தொடர்பான தங்கள் கட்சியின் நிலைப்பாடுகளையும் வெற்றிக்காக தாங்கள் வகுத்திருக்கும் வியூகங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய வழிவகையை உங்கள் வெற்றி வானொலி உங்களுக்காக ஆரம்பித்திருக்கிறது.

தினமும் காலை 6.30, மதியம் 12.00, மாலை 6.00, இரவு 9.00 மணிக்கு ஒலிபரப்பாகும் வெற்றியின் செய்தி அறிக்கையில் இந்த புதிய களம், களம் காண்கிறது. இதன் மூலம் மக்கள் தங்களை ஆளப்போகும் ஒவ்வொரு அரசியல்வாதிகளை பற்றியும் அறிந்துகொள்ள கூடியதாக இருக்கும். இதன் நன்மைகள், பிரதிபலன்களை மக்கள் மிக விரைவில் அறியக்கூடியதாக இருக்கும். வெற்றியின் செய்திப்பிரிவினர் மிக சிறப்பாக இந்த களத்தினை வடிவமைத்திருக்கின்றனர். தொடர்ந்தும் FEBRUARY 14ம் திகதி வரை இந்த களம் தன் வலையை விரிக்க காத்திருக்கிறது.

வெற்றி FM,

இனி ஒரு புது விதி செய்வோம்.

Tuesday, February 3, 2009

ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் புனருத்தாரண பாலஸ்தாபன விழா

வெற்றியின் ஊடக அனுசரணையில் நடைபெற்ற கொழும்பு 12 ஆமர் வீதி, பரடைஸ் பிளேஸ் ஸ்ரீ மகா காளியம்மன் திருக்கோவில் புனருத்தாரண பாலஸ்தாபன விழா நடைபெற்றது.

அமைதியும் அருளும் நிறைந்ததுள்ள இவ் ஆலயத்தின் கிரியைகளை போஷகர் பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள் ஆசியுடன் பிரதிஷ்டா பூஷணம், சிவஞானவித்தகர் வெங்கட சுப்பிரமணிய குருக்கள் நடத்திவைத்தார். பிரம்மஸ்ரீ க.யசோதரக்குருக்கள் மற்றும் பிரம்மஸ்ரீ ச.பரமேஸ்வரசர்மா ஆகியோர் இணைந்தது கிரியைகளில் ஈடுபட்டனர்.

காலை யாகத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சில முக்கிய கிரியைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து சுவாமி பால ஆலயத்தை அடைந்து பாலஸ்தாபன கிரியைகள் நடைபெற்றன. இதனிடையே, பல ஆலயங்களில் கும்பாபிஷேகங்கள் செய்து புகழ் பெற்ற பிரதிஷ்டா சிரோன்மணி பிரம்மஸ்ரீ சாமி விஸ்வநாதக் குருக்கள்(நவாலி) அவர்களிடம் பக்தர்கள் ஆசி பெற்றனர். தொடர்ந்து இடம்பெற்ற பூசை நிகழ்வுகளில் பல பக்தர்கள் பக்தி சிரத்தையோடு கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுகளின் நேரடி வர்ணனை நிகழ்ச்சிகளின் இடை இடையே ஆலயத்தில் இருந்து வெற்றியில்

வழங்கப்பட்டது. நிகழ்வுகளின் நிறைவாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. கலந்து கொண்ட அனைத்து பக்த அடியார்களும் அம்பாளின் அருளை பெற்றுச் சென்றனர்.

இந்த நிகழ்விற்குச் சென்ற வெற்றி குழுவினரை ஆலயபரிபாலன சபையினர் அன்புடன் அனுசரித்ததுடன் தங்கள் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர். சில நேயர்கள் வெற்றி அறிவிப்பாளர்களுடன் நிகழ்ச்சிகள் பற்றி கலந்துரையாடினர்.

இந்த நேரத்தில் ஆலயபரிபாலன சபையினருக்கும் நேயர்களுக்கும் வெற்றி குடும்பம் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

வெற்றி,

வாழ்க்கைக்கு வெற்றி.